Saturday, September 28, 2019
*கிறிஸ்டினா வும் நானும்* .... *********************** (மாஹிரா சிராஜ்,
அன்றைய தினம் வெகு அழகாகவே விடிந்தது எனக்கு. இரவு பெய்த மழையின் ஈரம் இன்னும் காய்ந்திருக்க வில்லை.. இன்னும் சிறிது நேரத்தில் கிறிஸ்டினா திருப்பள்ளியில் இருந்து வந்து விடுவாள். அவளுக்காக செய்து வைத்த குலாப் ஜமூனில் தேன் வடிந்து கொண்டிருந்தது. ஞாயிறு என்றாலே கொஞ்சம் வேலை பளு குறைந்த நாள் தான். ஆனால் இன்று போனஸாக சமைக்கும் வேலையும் இல்லை. அடுத்த வீட்டு கிறிஸ்டினாவின் தாயார் 10 வருடங்களுக்கு பின் கனடாவில் இருந்து இலங்கைக்கு வருகிறாள். அவர்களுடைய புனித தினங்களில் ஒன்றான ஈஸ்டர் தினம் அவளுக்கு இரு வாரங்களுக்கு முன்னரே களைகட்டி விட்டது. 30 வருட யுத்த காலத்தில் வெளிநாட்டில் தஞ்சம் அடைந்த கிறிஸ்டினாவின் சகோதரி எரினா பிள்ளைப்பேறு காலத்தில் அவள் தாய் லியோனா வயும் அவளுடன் அழைத்துக் கொண்டாள். கிறிஸ்டினா படிக்கும் காலத்தில் இருந்தே கண்டியில் தான் விடுதியில் தங்கி வந்தாள், அவளுடைய வகுப்பு தோழன் ஜோசப்பை மணந்து இங்கேயே நிரந்தரமாக தங்கியும் விட்டாள். என் எதிர் வீட்டு தோழி. இன்றைய சிறப்பு தினத்தை முன்னிட்டு உணவுக்காக என் கணவர் தான் வெள்ளை சேவலை அறுத்து கொடுத்தார். கிறிஸ்டினா கன்னி மேரியின் அமைதியான முகச் சாயலை கொண்டவள். மதங்களை மதிப்பவள். அவளுடைய பண்ட மாற்றில் கூட மாமிசம் கலக்காது. பைபிளும் குர்ஆனும் தான் எங்கள் பேசு பொருள். நானும் கிறிஸ்டினா வும் இணைந்து தான் அன்றைய புனித நாளுக்கான உணவு பண்டங்களை சமைத்தோம். சமைக்கும் போது அவளின் நாவு அவள் தாய் லியநோவின் புக ழையும் யுத்த வடுக்களையுமே கதை கதையாய் சொன்னது. கண்டியில் பிறந்து வளர்ந்த எனக்கு யுத்தம் பற்றி பெரிய அளவில் தெரியாது. மட்டக்களப்பில் அவள் அனுபவித்த யுத்த அனுபவங்கள் , அல்லோலங்களை உண்மையில் எனக்கு கனவில் கூட நினைக்க முடியாமல் இருந்தது. கண்ணீரின் மத்தியில் அவள் மன குறைகளை நானும் கேட்டு கொண்டிருந்தேன். ஆறுதல் சொல்ல தான் என்னிடம் வார்த்தைகள் இருக்க இல்லை. அவளின் ஒரே ஆசை தினமும் வாட்ஸ்ஆப்பில் பேசும் தன் தாயின் மடியில் படுத்து கொஞ்சம் உறங்க வேண்டும் என்பதே. 10 வயதிலேயே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் இருக்க வேண்டிய காலம் விடுதியில் தங்கி அன்பு தாயின் முகம் நேரில் கண்டு பத்து வருடங்கள் எனும் போது கிறிஸ்டினா வின் மனம் எந்தளவு இந்த புனித நாளை எதிர் பார்க்கும் என்று என்னால் உணர முடிந்தது. அவள் தாய் அவள் சொந்த ஊரான மட்டக்களப்பு மேல் அதிக பற்று கொண்டவள், இறந்து போன அவள் கணவரின் நினைவாக ஈஸ்டர் அன்று மட்டக்களப்பு திருப்பள்ளிக்கு சென்று கண்டிக்கு பகல் போசனதிற்கு வருவதாக ஏற்பாடு செய்திருந்தார். அவள் தாயிற்கு பிடித்த குலாப் ஜாமூன் செய்து கிறிஸ்டினா வின் வரவுக்கு காத்திருந்தேன். முச்சக்கர வண்டியின் சத்தம் கேட்டது. ஜோசப் kiristinaavai கை தாங்களாய் பிடித்து வர அவள் முகம் அழுதழுது வீங்கி போயிருந்தது. நானும் என் கணவரும் அவர்களிடம் விரைய கிறிஸ்டினா என்னை கண்டதும் தோளில் முகம் புடைத்து கேவினால் "அம்மா... அம்மா இனி" அவளால் கூறி முடிக்க முடியவில்லை. நான் அவளை அணைத்துக் கொண்டேன். மனம் ஏதோ கெட்ட செய்தி என்று கூறியது. ஜோசப் குண்டு வெடிப்பை பற்றி கூறியதும் நானும் கதறி விட்டேன். அவள் தாய் கர்த்தரின் கால்களுக்கடியில் இறந்து கிடந்த படம் வாட்ஸ்ஆப்பில் வந்திருந்தது. எல்லாம் முடிந்து ஒரு மணி நேரம் கழிந்து விட்டது. என் தொலைப்பேசி செயலிழந்து விட்டது அதனால் தான் உலகே அறிந்த செய்தி எனக்கு வரவில்லை.. நான் ஆறுதலாய் கிறிஸ்டினா வின் தலையை தடவினேன்.. கனவில் இருந்து எழுந்து வெறி வந்தவள் போல் "ஏன் அவர்களை கொன்றினம்? என்ன பாவம் செய்தினம்" என்று என்னை பிடித்து உலுக்கினல் அவள் கதறல் ஓயவில்லை. நானே எனக்கு கேட்டு கொண்டேன் " ஏன் இப்படி செய்தார்கள்? ஏன் உயிர் வதை செய்தார்கள்?" கிறிஸ்டினா வின் கண்ணீர் துளி அவள் கழுத்தில் தொங்கிய சிலுவையை நனைத்து கொண்டிருந்தது. இரத்தம் ஒழுக இயேசு தலையை குனிந்து கொண்டிருப்பதை போல் இருந்தது அக்காட்சி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment