அல்லாஹ் தந்த செல்வங்களிலே
மிகப்பெரிய செல்வம் குழந்தை செல்வம். அக்குழந்தை
செல்வத்தை வளர்த்து ஆளாக்குவது பெற்றோருக்கான முக்கிய கடமைகளில் ஒன்று. அக்கடமையை
சீர்பட செய்ய வேண்டுமானால் முதலில் பெற்றோர்கள் சமூக அறிவு கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
முக்கியமாக போசணை மிக்க உணவு, நோய் நொடிகள் ,
மேலும் குழந்தைகளின் கடமை,
உரிமை போன்ற்வற்றில் தெளிவு
பெற்றிருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக குழந்தயின் உளவளர்ச்சி பற்றி அதன் குறைபாடு பற்றி முழுவதும் அறிந்திருப்பது கட்டாயமாகும்.
இன்று உலகளாவிய ரீதியில் பல சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நோய் தான் Autism (தற்புனைவு ஆழ்வு ). இதை நோய் என்பதை விட ஒரு குறைபாடு
என்பதே பொருத்தமாகும்.
தற்போது உலகம் முழுவதும் வெகு வேகமாக அதிகரித்து
வரும் குறைபாடுகளில் ஆட்டிசம் மிக முக்கியமானது. அமெரிக்காவில் 150 பேரில் ஒருவருக்கு இந்த குறைபாடு உள்ளது என ஒரு
ஆய்வு கூறுகிறது.
இலங்கையை பொறுத்தமட்டில் நூற்றுக்கு ஒருவர் என்ற
விகிதத்தில் இக்குறைபாடு உள்ளதாக சுகாதார துறை
அத்தியட்சகர் டாக்டர். மஹிபால ஹேரத் குறிப்பிடுகிறார். மேலும் இலங்கையை பொறுத்தமட்டில்
Autism (தற்புனைவு ஆழ்வு ) குறைபாடுக்கான வாய்ப்புகள் அதிகம்
இனங்காணப்பட்டுள்ளன.. ஆகவே Autism (தற்புனைவு ஆழ்வு)
என்றால் என்ன? அக்குறைபாடுள்ள பிள்ளைகளை
எவ்வாறு இனம் காணுவது? என்பதை விரிவாக பாப்போம்.
தற்புனைவு ஆழ்வு என்பது மூளையின் இயல்பான வளர்ச்சி
பாதிக்கப்பட்டு தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாது செய்யும் ஒரு
குறைபாடு. இக்குறைபாடு உள்ள பிள்ளைகள் தன்னைச் சுற்றி நடக்கும் எதைப் பற்றியும்
கவலைப் படாமல், தங்களுக்கென்று
ஒரு தனி உலகத்தை உருவாக்கிக் கொண்டு அதில் மூழ்கி கிடப்பார்கள். ஆட்டிசம் பாதித்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்
என்று எந்த ஒரு வரையறையும் இருப்பதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில்
செயல்படுவதுண்டு. பிறந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வளர்ச்சி இருக்கும்
தாயின் முகம் பார்த்து சிரிப்பது,
பேசுவது என குறிப்பிட்ட மாதங்களில்
இந்த வளர்ச்சி தானாக இருக்கவேண்டும். இதையும் மீறி சில குழந்தைகள் பேசத் தெரியாமல்
இருப்பார்கள். தவிர ஆறு மாதங்களாகியும் தாய் முகம் பார்த்து சிரிக்காமல் குழந்தை இருத்தல், தாயின் கண்களை நேருக்கு நேர் பார்க்காமல் இருத்தல், 12 மாதங்களான பின்பும் மழலைச் சப்தங்கள் செய்யாமலிருந்தல், ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல் 18 மாதங்களில் பேசினாலும் ஒரே சப்தத்தையோ, சொல்லையோ திரும்ப திரும்பச் சொல்லுதல் இதன் ஆரம்ப அறிகுறிகளாகும். விளையாடுவதில்
சிக்கல் 18 - 24 மாதங்களில் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடாமல், தனியாகவே இருத்தல், கைகளை உதறிக் கொண்டே இருத்தல், ஒரு பொருளையோ, நபரையோ சுட்டிக்காட்ட இயலாமை, கதை கேட்பதில் விருப்பமின்மை தூக்கமின்மை, தூங்கும் நேரம் குறைவு, கீழே விழுந்து காயம் ஏற்பட்டாலும் வலியை உணராதிருத்தல் போன்றவையும் அறிகுறிகளாகும்.
குழந்தை பிறந்த 24 மாதங்களில் பரிசோதனை செய்தால், குழந்தைக்கு ஆட்டிசம்
உண்டா, இல்லையா என்பதை அறியலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால்
அவர்களுக்கான பயிற்சியை எளிதில் தொடங்கிவிடலாம். 2 வயதுக்குள் அடையாளம் கண்டுகொண்டால்
குணப்படுத்துவது எளிது என்றும் கூறுகின்றனர் நிபுணர்கள்..
மேலும் இந்நோயானது பெண்களை விட ஆண் சிறார்களையே
அதிகம் தாக்குகிறது.. இந்தியாவில் மட்டும் சுமார் 20 லட்சம் இந்தியர்கள் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், ஆட்டிசம் பற்றிய எந்த விவரமும் பொதுமக்களை இன்றுவரை அதிகளவில் சென்றடையவில்லை
என்பது கவலைக்குரிய விஷயமாகும். அமெரிக்கா ஆய்வு ஆட்டிசம் பாதிப்பிற்கு
எந்த காரணமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் ஒரு குழந்தைக்குப் பின்
குறுகிய இடைவெளியில் அடுத்துப் பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிசம்" பாதிப்பு ஏற்படும்
அபாயம் அதிகம் என்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வில்
தெரியவந்துள்ளது. முதல் குழந்தை பிறந்த பிறகு, குறைந்தபட்சம் மூன்றாண்டு
களுக்குப் பின் பிறக்கும் குழந்தையைவிட, இரண்டு ஆண்டு களுக்குள்
பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிச ஆபத்து அதிகம் என்கிறார்கள், இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள். குழந்தைகளுக்கு மறுவாழ்வு ஆட்டிசம் குறைபாடு ஏற்படுவதற்கு
தாய், தந்தையரின் பரம்பரையில் யாரேனும் பாதிக்கப்பட்டிருத்தல், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற கனிமச் சத்துகளின் குறைபாடு, 'செக்ரடின்' என்ற ஹார்மோன் குறைபாடு என பல காரணங்கள் கூறப்படுகின்றன.
ஆனால் 'ஆட்டிசம்' ஒரு நோய் அல்ல என்பது
மட்டும் உறுதி.
. சிறந்த பயிற்சியும் கவனமும் எந்தக் காரணத்தினால்
இந்த ஆட்டிசக் குறைபாடு ஏற்படுகிறது என்பதே கண்டறியப்படாமல் இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட
குழந்தைகள் பல குறைகளுடன் இருந்தாலும் ஏதோ ஒரு அதீத திறனுடன் இருப்பார்கள் என்பது மட்டும்
தெரிகிறது. அந்தத் திறனை வெளிக் கொணர்வது சிறந்த பயிற்சியின் மூலமும் பெற்றோர்களின்
கவனத்திலுமே உள்ளது என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட
குழந்தைகள் கட்டுப்பாடின்றி காணப்படுவர். அனைவரிடமும் சகஜமாக பழகாமல் ஓரிடத்தில் அமராமல்
சத்தமிட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்த செயல்பாடுகள் ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும்.
அவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ற பயிற்சிகளை கொடுக்கும்போது அவர்களிடம் பெரும் மாற்றங்களை
காண முடிகிறது என்கின்றனர் இவர்களுக்கு பயிற்சி அளிப்பவர்கள். அப்படி பயிற்சியளித்தால்
அவர்களிடம் ஒளிந்திருக்கும் அதீத திறன்களைக் கண்டறிய முடிகிறது என்கின்றனர் பயிற்சியாளர்கள்.
பெற்றோர்களின் பங்கு ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதன்
மூலமே அவர்களிடம் ஒளிந்திருக்கும் திறனைக் கண்டுகொள்ள முடியும் என்கின்றனர் இந்தக்
குழந்தைகளின் பெற்றோர்கள். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு
திறனுடன் காணப்படுகிறார்கள். பேசும் பயிற்சி, பழகும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் மூலம் இவர்களின்
குறைகளை ஓரளவு களைய முடியும்.
எம் முஸ்லிம் சமூகத்தை எடுத்து கொண்டால் அதிகமானோர் தற்புனைவு
ஆழ்வு பற்றிய அறிவு இல்லாமல் இருப்பது கவலைக்குரியது. மேலும் பலர் தம் பெயர் பாதிக்க
பட்டு விடுமோ அல்லது குடும்பத்தில் இப்படி குறைபாடுள்ள குழந்தை இருப்பதால் குடும்ப
அந்தஸ்து பறி போய் விடுமோ என்ற பயத்தில் இக்குறைபாட்டை மூடி மறைக்கின்றனர். உளவளத்துணை
ஆலோசகர் ஒருவரை நாடி இதற்கான தீர்வை பெறாமல் உளவள துணை நிபுணர்களிடம் சென்றால் குழந்தை
பைத்தியம் என்ற பட்டத்தை பெற்று விடுவார் என்ற அறியாமையில் உள்ளனர். ஆகவே பெற்றோர்களே மேற்கூறிய குறைபாடுகள் உங்கள் குழந்தையிடமும்
காணப்பட்டால் கட்டாயமாக உளவள ஆலோசகரை சந்தித்து கலந்துரையாடி அதற்கான உரிய சிகிச்சை
முறைகளை மேற்கொண்டு உங்கள் குழந்தயின் எதிர்காலத்துக்கு வித்திடுங்கள்.
No comments:
Post a Comment