Tuesday, October 1, 2019

தண்டனை.....,⭐⭐⭐ ஒரு நிமிட கதை

தண்டனை.....,⭐⭐⭐
ஒரு நிமிட கதை...
மாஹிரா .
10.33
சிறுவர் தின வாழ்த்துக்கள்💐💐💐

டீச்சர்....ஐந்தாவது முறை அவன் குரல் அவளுக்கு கேட்டது இருந்தும் அவள் அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. மறுபடியும் டீச்சர்... எனக்கு... அவன் குரல் கிணற்றில் இருந்து பேசுவதை போல கம்மியது. இவளும் ஒரு தாயல்லவா.. மனம் வலித்தது மெல்ல நிமிர்ந்து பார்த்தாள் அவன் கண்கள் கண்ணீரை பிரசவிக்க ஆயத்தமாய் இருந்தது. அவன் பிஞ்சு உதடுகள் கண்ணீரை அடக்க பற்களால் அழுத்தி பற்றப்பட்டிருந்தது. மூக்கின் ஓரம் துடித்துக்கொண்டிருந்தது. டீச்சர்... நா.. நான் மறுவா படிச்சி தார நேரம் குழப்ப மாட்டேன். நீங்க அடிச்சா பரவல்ல பேசாம இருக்க வானம். சொல்லி முடிக்கையிலே அவன் கண்களில் இருந்து துளி கண்ணீர் இவள் கைப்பையை தொட்டது. கருநீல கைப்பையில் அவன் கண்ணீர் துளி முத்தென மின்னியது. அவனை வாரி நெற்றியில் முத்தமிட அவள் மனம் துடித்தது, ஆனாலும் முகத்தை கொஞ்சம் கோபமாக வைத்துக்கொண்டு....  சரி ரிஹான் மறுபடி கொளபடி பண்ணினா நான் உண்மையா பேச மாட்டேன். சரியா?  அவன் தலை இருபுறமும் மாறி மாறி ஆடியது. அவள் கைகள் அவன் கண்களை துடைத்துவிட்டு அவன் கொப்பியில் என்றுமில்லாமல் திகதியுடன் எழுதப்பட்ட கழித்தல் கணக்குகளை சரி பார்த்து மூன்று நட்சத்திரங்களை போட்டது. நட்சத்திர ஒளி அவன் கண்களில் மின்னியது..⭐⭐⭐

Sunday, September 29, 2019

பரிசு பொதி ( செக்கன் கதைகள்)

கொட்டும் மழையில் விடுதி வாசலில் கால் கடுக்க நின்றிருந்தாள் சிறுமி,  சிறுவர் தின பரிசு பொதியுடன் வரவிருக்கும் தாய்க்காக.

Saturday, September 28, 2019

*கிறிஸ்டினா வும் நானும்* .... *********************** (மாஹிரா சிராஜ்,

                            அன்றைய தினம் வெகு அழகாகவே விடிந்தது எனக்கு. இரவு பெய்த மழையின் ஈரம் இன்னும் காய்ந்திருக்க வில்லை.. இன்னும் சிறிது நேரத்தில் கிறிஸ்டினா திருப்பள்ளியில் இருந்து வந்து விடுவாள். அவளுக்காக செய்து வைத்த குலாப் ஜமூனில் தேன் வடிந்து கொண்டிருந்தது. ஞாயிறு என்றாலே கொஞ்சம் வேலை பளு குறைந்த நாள் தான். ஆனால்  இன்று போனஸாக  சமைக்கும் வேலையும் இல்லை. அடுத்த வீட்டு கிறிஸ்டினாவின் தாயார் 10 வருடங்களுக்கு பின் கனடாவில் இருந்து இலங்கைக்கு வருகிறாள். அவர்களுடைய புனித தினங்களில் ஒன்றான ஈஸ்டர் தினம் அவளுக்கு இரு வாரங்களுக்கு முன்னரே களைகட்டி விட்டது. 30 வருட யுத்த காலத்தில் வெளிநாட்டில் தஞ்சம் அடைந்த கிறிஸ்டினாவின் சகோதரி எரினா பிள்ளைப்பேறு காலத்தில் அவள் தாய் லியோனா வயும் அவளுடன் அழைத்துக் கொண்டாள்.      கிறிஸ்டினா படிக்கும் காலத்தில் இருந்தே கண்டியில் தான் விடுதியில் தங்கி வந்தாள்,  அவளுடைய வகுப்பு தோழன் ஜோசப்பை மணந்து இங்கேயே நிரந்தரமாக தங்கியும் விட்டாள். என் எதிர் வீட்டு தோழி.  இன்றைய சிறப்பு தினத்தை முன்னிட்டு  உணவுக்காக என் கணவர் தான் வெள்ளை சேவலை அறுத்து கொடுத்தார். கிறிஸ்டினா கன்னி மேரியின் அமைதியான முகச் சாயலை கொண்டவள். மதங்களை மதிப்பவள். அவளுடைய பண்ட மாற்றில் கூட மாமிசம் கலக்காது. பைபிளும் குர்ஆனும் தான் எங்கள் பேசு பொருள்.   நானும்  கிறிஸ்டினா வும் இணைந்து தான் அன்றைய புனித நாளுக்கான உணவு பண்டங்களை சமைத்தோம். சமைக்கும் போது அவளின் நாவு அவள் தாய் லியநோவின் புக ழையும் யுத்த வடுக்களையுமே கதை கதையாய் சொன்னது. கண்டியில் பிறந்து வளர்ந்த எனக்கு யுத்தம் பற்றி பெரிய அளவில் தெரியாது. மட்டக்களப்பில் அவள் அனுபவித்த யுத்த அனுபவங்கள் , அல்லோலங்களை  உண்மையில் எனக்கு கனவில் கூட நினைக்க முடியாமல் இருந்தது. கண்ணீரின் மத்தியில் அவள் மன குறைகளை நானும் கேட்டு கொண்டிருந்தேன். ஆறுதல் சொல்ல தான் என்னிடம் வார்த்தைகள் இருக்க இல்லை. அவளின் ஒரே ஆசை தினமும் வாட்ஸ்ஆப்பில் பேசும் தன் தாயின் மடியில் படுத்து கொஞ்சம் உறங்க வேண்டும் என்பதே.  10 வயதிலேயே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் இருக்க வேண்டிய காலம் விடுதியில் தங்கி அன்பு தாயின் முகம் நேரில் கண்டு பத்து வருடங்கள் எனும் போது கிறிஸ்டினா வின் மனம் எந்தளவு இந்த புனித நாளை எதிர் பார்க்கும் என்று என்னால் உணர முடிந்தது. அவள் தாய் அவள் சொந்த ஊரான  மட்டக்களப்பு மேல் அதிக பற்று கொண்டவள், இறந்து போன அவள் கணவரின் நினைவாக  ஈஸ்டர் அன்று மட்டக்களப்பு திருப்பள்ளிக்கு சென்று கண்டிக்கு பகல் போசனதிற்கு வருவதாக ஏற்பாடு செய்திருந்தார்.   அவள் தாயிற்கு பிடித்த குலாப் ஜாமூன் செய்து கிறிஸ்டினா வின் வரவுக்கு காத்திருந்தேன். முச்சக்கர வண்டியின் சத்தம் கேட்டது. ஜோசப் kiristinaavai கை தாங்களாய் பிடித்து வர அவள் முகம் அழுதழுது வீங்கி போயிருந்தது. நானும் என் கணவரும் அவர்களிடம் விரைய கிறிஸ்டினா என்னை கண்டதும் தோளில் முகம் புடைத்து கேவினால் "அம்மா... அம்மா இனி" அவளால் கூறி முடிக்க முடியவில்லை. நான் அவளை அணைத்துக் கொண்டேன். மனம் ஏதோ கெட்ட செய்தி என்று கூறியது. ஜோசப் குண்டு வெடிப்பை பற்றி கூறியதும் நானும் கதறி விட்டேன். அவள் தாய் கர்த்தரின் கால்களுக்கடியில் இறந்து கிடந்த படம் வாட்ஸ்ஆப்பில் வந்திருந்தது. எல்லாம் முடிந்து ஒரு மணி நேரம் கழிந்து விட்டது. என் தொலைப்பேசி செயலிழந்து விட்டது அதனால் தான் உலகே அறிந்த செய்தி எனக்கு வரவில்லை.. நான் ஆறுதலாய் கிறிஸ்டினா வின் தலையை தடவினேன்.. கனவில் இருந்து எழுந்து வெறி வந்தவள் போல் "ஏன் அவர்களை கொன்றினம்? என்ன பாவம் செய்தினம்" என்று என்னை பிடித்து உலுக்கினல் அவள் கதறல் ஓயவில்லை. நானே எனக்கு கேட்டு கொண்டேன் " ஏன் இப்படி செய்தார்கள்? ஏன் உயிர் வதை செய்தார்கள்?" கிறிஸ்டினா வின் கண்ணீர் துளி அவள் கழுத்தில் தொங்கிய சிலுவையை நனைத்து கொண்டிருந்தது. இரத்தம் ஒழுக இயேசு தலையை குனிந்து கொண்டிருப்பதை போல் இருந்தது அக்காட்சி.

முதற் பிரதி நூலே (poem)


தலைப்பிள்ளையாய் நானும் - என் முதற் கரு நூலே
உன்னை என் மனதில் சுமந்தேன்.
மாதங்கள் பத்தல்ல - என் பிள்ளைப்பேறு 
வருடங்கள் பல கனவோடு - உன்னை
மன அறையில் நான் சுமந்தேன்.

பல இரவுகள் துயில் மறந்து
பல பொழுதுகள் ஊன் மறந்து
சிறிது சிறிதாக என் கன்னி படைப்பே
உன்னை நானும் முத்தெழுத்தால் வடித்தெடுத்தேன்.

அச்சகங்கள் பல அலை மோதினாலும்- ஏழைத்தாயிவள்
கையிருப்பு பார்த்து நானும் எட்டா தூரமதில் -உன்னை
அச்சுப்பதிக்க அனுப்பி வைத்தேன்.

படியிறங்கிய கன்னிபெண் கரைசேரும் வரை
வழி மேல் விழி வைத்த தாய் போல
என் முதற் பிரதி நூலே -உன்னை காண
பல நாட்கள் தவம் நான் கொண்டேன்.

பல கனவுகள் விழியோடு - பல இரவுகள் கனவோடு
என் கன்னி படைப்பே உன்னை வெளியிட
தினமொரு  கனவுகள் நான் கண்டேன் .

கனவெல்லாம் பொய்யாக ஏழைத்தாயின் மௌன
கதறலோடு நீயும் வீட்டிலேயே பிரசுரிக்கப்பட்டாய்
உன்னை கொண்டாட யாருமில்லை
திண்டாடினேன் இந்த ஏழைத்தாய் .

பலரின் சுய முகங்கள் உன் வரவில் நான் உணர்ந்தேன் .
சிலரின் சில்லறைதனம் உன் விற்பனையில் - நான் கண்டேன்.
பிச்சையாய் உன்னை விற்க நீ -எத்தீனின் மகவில்லை
ஈன்றெடுத்த தாய் வாக்கு பொய்யாக போவதில்லை

ஏறெடுத்து பார்க்காதவர் - எட்டி பார்க்க தேவையில்லை
ஈழம் ஒருநாள் உன் புகழ் பாடும்
எனக்கேதும் ஐயமில்லை.


மனிதா நீ இன்னும் - சிந்திக்கவில்லை (poem)


மனிதா நீ இன்னும் - சிந்திக்கவில்லை
கை நிறைய விறலிருந்தும்
விறல் நிறைய மோதிரம் தேடும் நீ ஏனோ - சிந்திக்கவில்லை
கையின்றி ஊனமாய்
செல்லும் மனிதனைப்பற்றி………

நான்கு சுவரிருந்தும் சுவர் தாங்கும் கூரையிருந்தும்
அடுத்த மாடியை கட்ட பிரயாத்தனப்படும் -  நீ
ஏனோ சிந்திக்கவில்லை
வானமே கூரையாகவும் நிலமே வீடாகவும்
வாழும் மனிதனைப்பற்றி………..

கை நிறைய சம்பளமும் வயிறு நிறைய
போஜனமும் தினம் காணும் -  நீ
வங்கி சேமிப்பை யோசிக்கையில்
ஏனோ - சிந்திக்கவில்லை
அரை வயிறே தன் சேமிப்பாய் வாடும் மனிதனைப்பற்றி……

மனிதா! நீ சிந்திக்க மறப்பினும்
ஒரு நாள் சந்திப்பாய்,
உனக்கான ரஹ்மத்துக்களை வாரி வழங்கிய -  ரஹ்மானை
அந்நாள் நீ கலங்குவாய்
ஏனோ இதுநாள் வரை நாம்  -சிந்திக்க மறந்தோம் என.

உன் நினைவோடு நான்…..(short story)


சில்லென்று வீசிய காற்று மெதுவாக விஸ்வநாதனின் முகத்தை தீண்டியது.  இமைகள் இரண்டையும் மூடி கொண்டார்,  மனைவி பாக்கிய லட்சுமி மூடிய விழிக்குள் ஒரு கோடாய் தெரிந்து மறைந்தாள்.  சென்ற மாதம் இதே நாள் தான் '' என்னங்க நெஞ்சு கொஞ்சம் வலிக்குறாப்புல இருக்கு, '' என்று கணவனின் தோளில்  சாய்ந்தவள் எழுந்திருக்கவே இல்லை.  கணவனின் மடியிலேயே நிம்மதியாக இறுதி மூச்சை விட்டு விட்டாள் ஆனால் அவளின் மறைவுக்கு பின்னால் விஸ்வநாதன் தான் இன்னும் பழைய விஸ்வநாதனாய் மாறவில்லை.  கடமைக்கு சாப்பாடு ஒரு குளியல் பத்திரிக்கை என நடை பிணமாக அலைந்தார். நாளின் பாதி கட்டிலில் கழிந்தது.  கனடாவில் உள்ள மகள் செந்தாமரையும் தந்தையை தம்மோடு வர பல தடவை கேட்டு சலித்து விட்டாள் . அவளுக்கும் இலங்கைக்கு வர முடியாத சூழ்நிலை. தந்தையின்  தனிமை அவளை வெகுவாக பாதித்தது.
                                                இருபத்தேழு வயதில் இளமையை  உருவாக பதினெட்டு வயது பாக்கிய லட்சுமியை கரம் பிடித்த அன்று இருந்தே அதே நேசம் தான் அவள் இறக்கும் வரை விஸ்வநாதனிடம் இருந்தது.  ஐம்பது வருட அன்யோன்யம். இரண்டு நாளுக்கு மேலாக இவர்களின் சண்டை நிலைத்தது இல்லைஇருவரில் ஒருவர் பச்சை கொடி பிடித்து சண்டையை முடிவுக்கு கொண்டு வருவார்கள். இருவருக்கும் தவ புதல்வியாய் பிறந்த செந்தாமரை கணவனுடன் கனடாவில் வசிக்கிறாள். அவளை பிரிந்த போது  கூட உனக்கு நான் எனக்கு நீ  என்ற அன்யோன்யம் அத்தம்பதியை பார்ப்போர் மெச்சும் அளவுக்கு வாழ செய்தது.
                                                பழைய நினைவில் கட்டுண்ட விஸ்வநாதன் மனைவியின் புகைப்படத்துடன் மானசீகமாக உறவாடி கொண்டிருந்தார்புகைப்படத்தின் பின்னால் கத்தரி செடியில் பூ சிரித்து கொண்டிருந்தது. ஏதோ நினைவு வந்தவராக மனைவியின் மரக்கறி தோட்டத்தை ஜன்னலின் ஊடக எட்டி பார்த்தார், அவள்  மறைந்ததில் இருந்து பார்போரேற்ற அனாதையாக வாடி வதங்கி இருந்தது.  ஒரு மாதம் மனைவியை இழந்து இவர் தவித்தாலும் கடமைக்காவது உணவும் நீரும் இரைப்பையை நிரப்ப தான் செய்தது.  ஆனால் இந்த செடி கொடிகள் தாயின்றி தவிக்கும் சேயாய் வாடி  இருப்பதை பார்க்கையில் விஷ்வநாதனின் நெஞ்சில் சொல்லொணா வேதனை குடிகொண்டது. பாக்கிய லட்சுமி அவரை ஏக்கமாக பார்ப்பது போலொரு மனப்பிரம்மை.   தாமதிக்காமல் பின்வாசல் கதவை திறந்தவர் குழாயை திறந்து தோட்டத்திற்கு நீரை பாச்சினார், நீரை கண்ட செடி கொடிகள் காற்றில் ஆடி மானசீகமாக நன்றி சொல்லியது.
                                                பாக்கியத்தின் பொழுது கழிவது இந்த தோட்டத்தில் தான்,  வீட்டில் அவளை காணாவிடின் தோட்டத்திற்கு வந்து பார்த்தால் போதும் ஏதாவது ஒரு செடியோடு சிரித்து கொண்டோ சண்டையிட்டு கொண்டோ நேரத்தை கடத்தி கொண்டிருப்பாள். .  விஸ்வநாதனுக்கு மனைவி வாயிற்கு ருசியாக சமைத்து போடும் மரக்கறி மட்டும் தான் வேண்டும்  அதை வளர்க்க வேண்டும் என்ற என்னமோ அவற்றை பராமரிக்கும் என்னமோ அவருக்கு வந்ததில்லை,  பாக்கியமும் கணவனிடம் உதவி கேட்டதில்லை. அவளால் முடிந்த அளவில் தோட்டத்தை அழகாக வைத்திருந்தாள். கடைசியாக கத்தரி செடியோடு பேசிவிட்டு கடைசியாக கணவனின் தோள் சாய்ந்தவள் தான். நினைவு மறுபடியும் மனைவியை சுழல மெதுவாக கணனியின் முன் அமர்ந்தார்.  'ஹோம் கார்டன்' பற்றி பல தகவல்களை பெற்றார்,  மனைவிக்கு செய்யும் நன்றி கடனாய் தோட்டத்துடன் தன்னை இணைத்து கொண்டார்.  அவருக்கு தேவையான பசளைகளை மகள் கனடாவில் இருந்து பெட்டி பெட்டியாக அனுப்பி வைத்தாள். மகளுக்கும் தந்தை முன் போல் சிரித்து பேசுவதில் அலாதி மகிழ்ச்சிஅவரின் விருப்பத்திற்கு தடை விதிக்காமல் அவரின் நடவடிக்கைகளை மட்டும் கவனிக்க எடுபிடியாக ராமசாமியை வேலைக்கு வைத்து விட்டாள். பாக்கிய லட்சுமியின் தனி உழைப்பு விஸ்வநாதனின் கைபட்டு பல முன்னேற்றங்களை கண்டதுவெவ்வேறான பாத்திகளில் செடி கொடி என வேறாக நடப்பட்டு சிறந்த பலனையும் தந்தது. எண்ணி நான்கே மாதத்தில் கூடை நிறைய கத்தரிக்காய்க்களும்வெண்டிக்காய்களும்தக்காளியும் தோட்டத்தை மட்டுமல்ல இறந்து கிடந்த விஸ்வநாதனின் மனதையும் மகிழ்வித்தது.
                                                மரக்கறிகளை நான்காய் பங்கு போட்டு ராமசாமி மற்றும் aஅக்கம் பக்கத்தாருக்கு  ஒரு கூடையை ஒதுக்கினார். வருமானத்துக்கென ஒரு பங்கை ஒதுக்கினார். சமயலுக்கென மற்ற பங்கை ஒடுக்கி விட்டு எஞ்சிய பங்கை இணையத்தின் உதவியுடன் மணக்க மணக்க சமைத்தெடுத்து கொண்டு பாக்கிய லட்சுமியின் பிறந்த இடமான  ''அன்னையே வாழ்வு'' அனாதைநிலையத்து பிள்ளைகளுக்கு அன்னதானமாய் வழங்க சென்றார். வயிறும் மனமும் நிறைய அந்த குழந்தைகளுடன் குழந்தையாக பாக்கிய லட்சுமியும் சாப்பிடுவது போல இருந்தது. அந்த சனிக்கிழமை அவரின் நான்கு மாத உழைப்பின் பயனை கண்ணுக்கு எதிரில் காணக்கிடைத்தது. அன்னையே வாழ்வு இல்ல குழந்தைகள் மாதத்தின் கடைசியில் விஸ்வநாதனின் வருகைக்காக காத்து கொண்டிருந்ததுவிச்சு தாத்தா என்று குழந்தைகள் ஓடி வருகையில் சுவரில் மாட்டப்பட்ட  பாக்கிய லட்சுமியின் புகைப்படம் முன்னதை விட இப்பொழுது பிரகாசமாக தெரிந்தது விஸ்வநாதனுக்கு.
முற்றும். ....

புரிபவர்களுக்கு புரிந்துவிட்டால்....(short story)


வீடு நிரம்ப கூட்டம் இருந்தாலும் வீடே அமைதியாய் இருந்தது. தானே உலகம் என்ற மத்தாப்பில் இருந்த நிரஞ்சன் ஆறடி கட்டிலில் சடலமாய் படுத்திருந்தான். 30 வயது ஆக இன்னும் இரண்டு மாதம் இருந்தது. அவனை  சுற்றி வர கூட்டம் .. அது அன்பால் நிறைந்த கூட்டம் அல்ல, பார்வதி அம்மாளையும் அப்பாவி விநோதராவையும் பரிதாப கண்ணோடு அலசவே வந்திருந்தது  மொத்த கூட்டமும். கணவனின் சாவு விநோதராவை பாதித்ததா இல்லையா என்பதை எவராலும் கணிக்க முடியாமல் இருந்தது. கண்ணில் நீர் மல்க தன் மாமியாரின் மடியில் தலை சாய்த்து விட்டத்தை நோக்கி கொண்டிருந்தாள் வினோ..வினோதரா. 25 வயதும் ஆகாத பச்சை பெண், இவள் விதவை ஆனது யார் குற்றம்?
மகனின் கெட்ட குணத்தை மறைத்து பெண் கேட்டு சென்ற பார்வதி குற்றமா? விசாரிக்காது பெண் கொடுத்த வினோவின் தாய் குற்றமா? உண்மை தெரிந்த பின்னும் கணவனை திருத்த முடியும் என நம்பிய பேதையின் குற்றமா? இல்லை கடைசி காலத்தில் ஆட்டம் அடங்குவது புரிந்து திருந்திய நிரஞ்சன் குற்றமா? தப்பின் தண்டனையாய் வந்த புற்று நோயின் குற்றமா? யார் குற்றம் என்றாலும் இப்பபோதைக்கு மருமகளின் தலை கோதும் பார்வதியம்மாலே குற்றம் செய்துவிட்டோமே என்ற கவலையில் பெற்ற ஒரே மகனின் சாவுக்கு ஒரு சொட்டு கண்ணீர் வடிக்காமல் கல்லே உருவாக்கியிருந்தாள்.
                                                                        நிரஞ்சனை நீராட்ட எடுத்து செல்லும் போது மனைவியின் விதவை சடங்கை செய்ய பெண் கூட்டம் பூவோடும் பட்டு சேலையோடும் வந்திருந்தது. வினோ குற்றம் செய்யாவிடின் என்ன? அவள் பெண்ணாய் பிறந்துவிட்ட ஒன்று போதாதா? விதவை கோலம் அவள் அவதரிக்க வேண்டியது கட்டாயம். மனிதன் சந்திரனுக்கு இல்லை சூரியனுக்கே சென்று வந்தாலும் மாற்ற முடியாத மூட கலாசாரம்.
"என்னமா பார்வதி. ஓ மருமகளை சத்த உள்ள கூட்டிட்டு வாம்மா! சடங்குக்கு நேரமாச்சு." வயதான பாட்டியின் குரலில் விழுக்கென்று அமர்ந்தாள் வினோ. அச்சம் அவள் விழிகளில் தாண்டவமாடியது. பார்வதி நிதானமாய் மருமகளின் தலையை மீண்டும் மடியிலே கிடத்தினாள்.
" என்ன பார்வதி? நீ என்ன சின்ன குழந்தையா? சடங்கு சம்ப்ரதாயம் நடக்க வேண்டிய நேரத்துல நடக்கணமே? பார்வதியை கண்டித்துவிட்டு வினோவின் கையை பிடித்து அவளை எழுப்ப முயன்றால் பக்கத்து வீட்டு பாட்டி.
" ஏ மருமகளுக்கு எந்த சடங்கும் தேவல்ல. உங்க சடங்கு சம்ப்ரதாயத்தால யாருக்கு என்ன பலன்? சடங்கு செய்றதால போன உயிர் திரும்பி வருமா இல்ல வினோ இனி முன்ன போல ஆடி ஓட இயலுமா? இன்னும் வாழவே தொடங்காத இந்த பெண்ண பொட்டலிச்சி பூவ அழிச்சி, வெள்ளை சேலை உடுத்த நான் விடமாட்டேன். அவ இந்த வீட்டுக்கு எப்படி வந்தாலோ அப்படி தான் அவ இருப்பா. என் பையன் கெட்ட காலம் குடியாலேயே அவன் மூழ்கிட்டான் அதுக்கு இந்த அப்பாவி பெண் என்ன செய்ய? பூவலிச்சி பொட்டலிச்சி அவளை மூலைல இருக்க அவ என்ன பாவம் பண்ணினா? நீங்களே சொல்லுங்க பாட்டிமா நானும் கணவனை  இழந்து தவிக்குற நேரம் சடங்கு என்ற பேர்ல என்னையும் பொட்டலிச்சி பூவ அழிச்சி, வெள்ளை சேலை உடுக்க வெச்சிங்க? ஆசைக்கு ஏதாச்சும் நல்ல காரியத்துக்கு வந்தேனா ? சொந்த மகனுட கல்யாணத்தையே மூலைல இருந்து தானே நான் பார்த்தேன்? வீடே கதி எண்டு நான் இருந்ததால தான் இல்லாத கெட்ட பழக்கமெல்லாம் என் மகன் பழகி இன்னக்கி பாடைல போறான். அந்த நிலைமை வினோக்கு வரக்கூடாது. அவ சமுதாயத்துல ஒதுக்க பட வேண்டியவை இல்ல. இனி அவ என் மருமக இல்ல சொந்த மகள். அவளை பாதுகாக்கிறது ஏ கடமை. " என்று வினோவை மாரோடு அணைத்தாள் பார்வதி.
"கெட்டது நடந்த வீட்ல நல்லது நடக்கனுமுனு  சொல்வாங்க அடுத்த மாசமே ஏ மகளுக்கு கல்யாணம் முடிக்குறதா நான் முடிவெடுத்துட்டேன், இனி நடக்குறத பாருங்க" என்று வினோவை தோளில் சாய்த்து கொண்டாள் பார்வதி..
அவள் சொன்னதில் பிழையில்லை என்பதை போல அமைதியாய் இருந்தது மக்கள் கூட்டம்.அவள் சொன்னதில் பிழையில்லை என்பதை போல அமைதியாய் இருந்தது மக்கள் கூட்டம்.